டெல்லி: நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

நாட்டின் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் ராணுவ மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடக்க உள்ளன. குடியரசுத் தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்தியா1947ல் சுதந்திரம் அடைந்த நிலையில் 1950ல் குடியரசாக அறிவிக்கப்பட்டு இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஜனவரி 26ம் தேதி இந்தியாவில் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது.

குடியரசுத் தினத்தை முன்னிட்டு தேசிய தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மரியாதை செலுத்தினார். அங்கு இருக்கும் போர் வீரர்களின் நினைவு தூணில் மலைவளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக முப்படை அணிவகுப்பு நடக்கும் பகுதிக்கு பிரதமர் மோடி வந்தார்.

இதை தொடர்ந்து டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அங்கு குடியரசுத் தின கவுரவ பரிசுகளை பிரதமர் மோடி வழங்க உள்ளார். பின்னர் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் ராஜ வீதியில் நடக்க உள்ளன.

25 அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும். பல்வேறு மாநிலங்கள், அரசு அமைப்புகள், படைகளின் அணிவகுப்புகள் நடக்கும்.தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அங்கு நடக்க உள்ளன. ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெறும்.

மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், அதிநவீன ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப்படை சாகசமும் நடைபெற உள்ளன. தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

குடியரசுத் தினத்தை முன்னிட்டு ராஜமுதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து செல்ல இருக்கிறது. கொரோனா பரவலை முன்னிட்டு டெல்லியில் 5000- 8000 அளவிலான மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தின வருடம் இது என்பதால் ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவத்தை’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இந்த முறை பெரிய கலைநிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களுடன் குடியரசுத் தின விழா இன்று கொண்டாடப்பட உள்ளது.