சென்னை: 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அதிமுக ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 61,000 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. தற்போது நாள் ஓன்றுக்கு 1.34 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது.

சென்னை திருவான்மியூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில். தஞ்சை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று சிறிய அளவில் எண்ணிக்கையில் கூடி உள்ளது. கொரோனா தொற்று அதிகரிக்கும் கடலூர் மாவட்டத்துக்கு நாளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். தேயிலை தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தற்போது, தமிழ்நாட்டில் கைவசம் 8,16,890 தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. இத்தகைய அளவு தடுப்பூசிகளை 2 அல்லது 3 நாட்கள் போடலாம் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தினமும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 1.6 லட்சம் என்ற அளவில் உள்ளது.

இனி மாவட்ட வாரியாக எடுக்கப்படும் கொரோனா மாதிரி பரிசோதனை விவரமும் செய்திக்குறிப்பில் தெரியப்படுத்தப்படும், கொரோனா அதிகரிக்க தொடங்கிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.