டெல்லி: மோடி அரசின் கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம் இந்தியாவின் இதயத்தில் வாளாக குத்துகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தடுப்பூசி முழுமைபெற வேண்டும் எனில் மேலும் 8 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற தகவலை சுட்டிக்காட்டி ட்விட்டரில் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தில் எந்த கொள்கைகளையும் கொண்டிருக்கவில்லை என அவர் சாடியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர்பக்கத்தில், மோடி அரசின் கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம் அன்னை இந்தியாவின் இதயத்தில் வாளாக குத்துகிறது என்பது சோகமான உண்மை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோன்று கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்ட விகிதம் இரட்டை இலக்கத்தில் சென்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் கண்டித்துள்ளார். ஒரு மனிதரும் அவரது ஆணவமும் மற்றும் ஒரு வைரஸும் அதன் மாறுபாடுகளும் என மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்த ராகுல்காந்தி கொரோனாவுக்கு பிறகு 97 சதவீத இந்தியர்கள் மேலும் ஏழைகளாக மாறியிருப்பதாகவும் கூறியுள்ளார். 

ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா பாதிப்பை மத்திய அரசு சரியான முறையில் கையாள தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. கொரோனாவுக்கு எதிராகப் போராட சரியான நோக்கம், கொள்கை, உறுதிப்பாடு ஆகியவை தேவை. மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்ற  வகையில் பேசுவது எந்த வகையிலும் உதவாது என முன்னதாக ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.