கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைமை செயலாளரை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில், அவரை பணியில் இருந்து விடுவிக்க முடியாது என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா எழுதியுள்ள கடிதத்தில், தங்கள் மாநில தலைமை செயலாளர் அளப்பன் பந்தோபாத்யா மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ள ஒருதலைப்பட்ச முடிவால் தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் தலைமை செயலாளரை மாற்றி இருக்கக்கூடாது என்றும் கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார். மேற்குவங்க மாநிலம் தற்போது எதிர்கொண்டுள்ள மிக நெருக்கடியான சூழலில் தலைமை செயலாளர் அளப்பன் பந்தோபாத்யாவை விடுவிக்க முடியாது என்றும் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற பிரதமர் மோடி உடனான ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாமாக கலந்துக்கொண்டார். 

சில நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்த மம்தா, பிரதமரிடம் புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மம்தாவுக்கு பதிலடி அளிக்கும் விதத்தில், மேற்கு வங்க மாநில தலைமை செயலாளர் அளப்பன் பந்தோபாத்யாவை திரும்ப பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. டெல்லியில் உள்ள பணியாளர் பயிற்சித்துறை அலுவலகத்திற்கு அவரை இன்று காலை 10 மணிக்கு அனுப்பி வைக்குமாறு மேற்குவங்க அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தலைமை செயலாளர் அளப்பன் பந்தோபாத்யாவை விடுவிக்க முடியாது என்று தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.