சென்னை; மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டின் நலன் காக்கப்பட வேண்டும். பெங்களூர் குடிநீர் தேவைக்காக அணை கட்டுப்படுவதாக கர்நாடக அரசு கூறுவது ஏற்புடையது அல்ல.

இந்த திட்டத்தினால் தமிழக விவசாயிகளின் நலம் மிகவும் பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதேபோல், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் கடந்த 6ம் தேதி, டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது பிரச்னை குறித்து விரிவாக எடுத்துரைத்து, ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே, மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக அணை கட்டுப்படுவதாக நீங்கள் கூறுவது சரியான காரணமாக இல்லை. மேகதாது அணை திட்டம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவை பாதிக்கும். தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரை திசை திருப்புவதாக மேகதாது திட்டம் உள்ளது. இதனால், தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும். எனவே, மேகதாது திட்டத்தை நீங்கள் கைவிட வேண்டும் என பதில் கடிதத்தில் முதல்வர் கூறியிருந்தார். இந்தநிலையில், மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க 12ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

இதற்காக, அனைத்து சட்டமன்றக் கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய 13 கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், விவசாயிகளின் நலனை பாதுகாப்பது,  சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* கொரோனாவை தொடர்ந்து மேகதாது பிரச்னைக்காக அனைத்து கட்சி கூட்டம் 2வது முறைகூடுகிறது.
* ஜூன் 6ம் தேதி முதல்வர், பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தினார்.
* இன்று நடக்கும் கூட்டத்தில் 13 கட்சிகள் பங்கேற்கின்றன.