சென்னை: தீவிர முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தளர்வுகளின்றி தற்போது முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருக்கிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டமானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் சிங் பேடி மற்றும் வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

முக்கியமாக நகரும் கடைகள் மூலமாக மக்களுக்கு தேவையான காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு அதற்கான பணிகளை முடக்கிவிட்டிருக்கிறது. மேலும் ரேஷன் கடைகள் 8 மணி முதல் 12 மணி வரை திறந்திருக்கும் என்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற அனுமதியையும் தமிழக அரசு தளர்வில்லா ஊரடங்கின் போது அமல்படுத்தியிருக்கிறது. பொதுமக்களுக்கு எவ்விதமான சிரமமும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். 

ஆனால் அத்தியாவசிய பொருட்களுக்கு  சிரமம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்களது குடியிருப்புகளுக்கு செல்லக்கூடிய வகையில் நகரும் கடைகளை ஊக்குவித்து, அதற்கு ஆர்வமுள்ளவர்கள் அரசிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற அனுமதியை வழங்கியிருக்கிறது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முறைகளும், மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எவ்வாறாக மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.