டெல்லி: மாநிலங்களுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு தர வரிசையில் கேரளா முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. நிதி ஆயோக் அமைப்பு நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டுதோறும் மாநிலங்களை தரவரிசைப்படுத்தி வருகிறது. சமூகவியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட 16 பிரிவுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களின் வரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. 

அதன்படி, நிதி ஆயோக்கின் மாநில வளர்ச்சி குறியீட்டு பட்டியலில் 100க்கு 75 புள்ளிகள் பெற்று கேரளா இந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்திருக்கிறது. தரமான கல்வி மற்றும் பூஜ்யம் விழுக்காடு உணவு தட்டுப்பாட்டை கொள்கை செயல்பாடு எதிரொலியாக கேரளா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. 74 புள்ளிகளுடன் 2வது இடத்தை தமிழ்நாடும், இமாச்சல பிரதேசமும் பகிர்ந்து கொண்டுள்ளன. ஏழ்மையை போக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கான தமிழகத்திற்கு 2ம் இடம் தரப்பட்டுள்ளது. 

வளர்ச்சி குறியீட்டு பட்டியலில் 72 மதிப்பெண்களுடன் ஆந்திர மாநிலம் 3வது இடத்தில் இருக்கிறது. பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் முறையே 52 மற்றும் 56 மதிப்பெண்களை பெற்று அட்டவணையில் பின்தங்கி இருக்கின்றன. அரியானா, மிசோரம், உத்திராகண்ட் ஆகிய மாநிலங்கள் முந்திய நிதி ஆண்டில் பின்தங்கி இருந்த நிலையில், 8 முதல் 12 புள்ளிகள் கூடுதலாக பெற்று சற்று முன்னேற்றம் கண்டுள்ளன. யூனியன் பிரதேசங்களுக்கான வளர்ச்சி இலக்கு அட்டவணையில் 79 புள்ளிகளை பெற்று சண்டிகர் முதலிடத்தில் இருக்கிறது. 68 புள்ளிகளுடன் தலைநகர் டெல்லி இரண்டாம் இடத்தில் இருக்கிறது.