சென்னை : மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவில் ஓபிசிக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது. நடப்பாண்டிலேயே எம்பிபிஎஸ், எம்.டி, எம்.எஸ், பிடிஎஸ், எம்.டி.எஸ், டிப்ளோமோ ஆகிய படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தி வந்த அரசியல், சட்டப் போராட்டத்தின் எதிரொலியாக ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 15% எம்பிபிஎஸ் இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. மாநில அரசின் மருத்துவ கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் படிப்புகளில் 50% இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டின் போராட்டத்தால் இந்தியாவுக்கே பலன்

திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.ஆனால் மண்டல் குழு பரிந்துரை படி ஓபிசியினருக்கு தரப்பட வேண்டிய 27% வழங்காமல் ஒன்றிய அரசு இழுத்தடித்து வந்தது. பல்வேறு காரணங்களைக் கூறி இட ஒதுக்கீட்டை வழங்க ஒன்றிய அரசு மறுத்து வந்தது. தொடக்கத்தில் மறுத்து வந்த ஒன்றிய அரசு, திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு கால அவகாசம் கோரிய நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகள் காரணமாக நாடு முழுவதும் ஒபிசி-யைச் சேர்ந்த மக்கள் பயன் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டே செயல்படுத்த தவறிய ஒன்றிய அரசு இவ்வாண்டு அமல்படுத்த முன்வந்துள்ளது.இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் பல ஆண்டு காலமாக எழுப்பி வந்த கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளது.

வில்சன் பேட்டி

அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் முயற்சியால் கிடைத்த வெற்றி என்று திமுக எம்.பி.வில்சன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் சமூகநீதி பாதுகாவலராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருவதாகவும் வில்சன் தெரிவித்துள்ளார்.