சென்னை: டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தன்னலமற்று மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் டாக்டர்கள் அனைவருக்கும் ‘இந்திய டாக்டர்கள் நாளில்’ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார். இந்தியாவின் புகழ்பெற்ற டாக்டரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் நாள் ‘இந்திய டாக்டர்கள் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது. 80 ஆண்டுகள் வாழ்ந்த டாக்டர். பி.சி.ராய் பிறந்ததும், இறந்ததும் ஜூலை முதல் நாள்தான். பிறப்பு எளிதாக அமைவதற்கும், இறப்பில் இருந்து உயிர்களை காப்பதற்கும் மருத்துவ சேவை அவசியமாகிறது என்பதன் அடையாளமாக இந்த நாள் விளங்குகிறது. தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் டாக்டர்களின் சேவை இன்றியமையாததாய் இருக்கிறது. 
அதனை உணர்ந்து வெள்ளை உடுப்பு அணிந்த ராணுவம்போல் அல்லும், பகலும் அரும்பணியாற்றுகின்றனர் டாக்டர்கள் என குறிப்பிட்டார்

. நீங்கள் மக்களை காக்கும் மகத்தான பணியை தொடருங்கள். இந்த அரசு உங்களை பாதுகாக்கும் முன்கள வீரராக செயலாற்றும்; துணை நிற்கும் என தெரிவித்தார்.  மக்களின் உயிர்காக்கும் டாக்டர்களுக்கான அரசாகவும் என்றும் இருக்கும் என்ற உறுதியினை வழங்குகிறேன். அதன் அடையாளமாகத்தான் கொரோனா தடுப்பு பணியில் தங்கள் இன்னுயிரை ஈந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.25 லட்சமும், பணியில் உள்ள டாக்டர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது என கூறினார்.