முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன.

இரண்டாம் ஆதித்தன் கொலை

இராஜகேசரி இரண்டாம் ஆண்டு கல்வெட்டு மூலம், இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் இப்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் தற்போது மேலக்கடம்பூர் என்று அழைக்கப்படும் ஊரில் கொலை செய்யப்பட்டான் என்பது தெரியவருகிறது. இக்கல்வெட்டு ‘பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனை’ கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, விற்கும் பணியினை மன்னனின் கட்டளைப்படி சதுர் வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக தெரிவிக்கிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5 ஆம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராஜராஜ சோழனுடையது என்பது தெளிவாகிறது. உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.