டெல்லி : குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் – தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது.
இந்தாண்டு 128 பேருக்கு பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளதாகவும், அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருதும், பத்ம பூஷண் விருதுக்கு 17 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 107 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது
உயரிய பத்ம விருதுகள்
இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பத்மவிபூஷன் விருது வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது
4 பேருக்கு பத்ம விபூஷண்
இதுகுறித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், பிரபா அத்ரே, ராதேஷ்யம் கேம்கா, கல்யாண் சிங் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பத்ம பூஷன் விருதுகள்
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, சீரம் நிறுவன மேலாண் இயக்குநர் சைரஸ் பூனாவாலா, பாரத் பயோடெக்கின் கிருஷ்ணா எல்லா – சுசித்ரா எல்லா, கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா, இணை நிறுவனர் மனைவி சுசித்ரா எல்லா மற்றும், விக்டர் பானர்ஜி, குர்மீத் பவா, புத்ததேவ் பட்டாச்சார்யா, நடராஜன் சந்திரசேகரன், மதுரா ஜெஃப்ரி, ரஷீத் கான், ராஜிவ் மெஹ்ரைஷி, பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
107 பேருக்கு பத்ம ஸ்ரீ
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாடகர் சோனு நிகம், நரசிம்ம ராவ் கரிக்கபதி உள்ளிட்ட பலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட 107 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுமென மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகி உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.