டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கூறியுள்ளார். 17-ஆவது மக்களவையின் 6-ஆவது கூட்டத்தொடரான மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி நிறைவடைய உள்ளது. கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், நோய்தொற்றுக்கான சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தொடர் வழக்கமான நேரமான காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக, இன்று அனைத்துக்கட்சி கூட்டம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேட்டியளித்தார். பொருளாதார வீழ்ச்சி, விவசாய பிரச்சினை உள்ளிட்ட 13 பிரச்சினைகள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்து விரிவாக பேச மத்திய அரசு தயாராக இல்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பெட்ரோல் -டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நலன் குறித்து என்னென்ன பிரச்சினைகளை எழுப்ப இருக்கிறோம் என்பதை கூட்டத்தில் தெரிவித்தோம் என்றார்.