சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசால் கடந்த 10ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்தங்கிய, கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதில், நீட் தேர்வு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. அதன்படி 9 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதங்களாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களை பெற்றனர்.

தொடர்ந்து ஏ.கே.ராஜன் தலைமையில் குழு செயல்பட தடை இல்லை என உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நிலையில், இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டதற்கு பின்னர் நீதியரசர் ஏ.கே.ராஜன் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

கிட்டத்தட்ட 86,342 பேர் நீட் தேர்வு குறித்து ஆதரவாகவும், எதிராகவும் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம் கருத்து தெரிவித்துள்ளனர். அறிக்கையை பொறுத்தமட்டில் பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிராக கருத்தை முன்வைத்திருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றிருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பான ஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.