டெல்லி: நாடு முழுவதும் 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 236 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று 2 கோடியை தாண்டியுள்ள நிலையில் நேற்று வரை இந்த நோயால் மிக குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நாடு முழுவதும் 11,717 பேர் இந்த நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழகத்தில் 236 பேருக்கு கரும்பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதிகபட்சமாக குஜராத்தில் 2,859 பேருக்கு கரும் பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் 2,770 பேர் கரும் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கரும் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து மூத்த மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்த நோய், புதிய மருத்துவ சவாலாக உருவெடுத்துள்ளது.

கருப்பு பூஞ்சை நோய் கண், நுரையீரலை அதிகம் பாதிக்கிறது. கொரோனா நோயாளிகளில் கட்டுப்பாடற்ற நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் உட்கொண்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் 2 பங்கு பேர் நீரழிவு நோயாளிகள் ஆவர். உலகளாவிய அளவில் 17 லட்சம் மக்கள் தொகையில் 0.005 சதவீதம் பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் 1,000 பேரில் 0.14 சதவீதம் பேருக்கு இந்த தொற்று ஏற்படுகிறது. சர்வதேச புள்ளிவிவரத்தை ஒப்பிடும்போது, இந்தியாவில் 80 சதவீதம் அளவுக்கு அதிக கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு உள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் 30 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் சுமார் 11,717-க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஸ்டீராய்டு மருந்து உட்கொள்பவர்கள், கட்டுப்பாடற்ற நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருப்பு பூஞ்சை எளிதில் தொற்றுகிறது. இவை தவிர ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இரும்பு சத்து உடையவர்கள், வெள்ளை அணுக்கள் குறைவாக இருப்பவர்கள், சுகாதாரமற்ற ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டோருக்கும் இந்த தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.