சென்னை: கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சட்டசபையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.  சட்டப்பேரவையில் இன்று திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேசுகையில், ‘‘கடந்த ஆட்சியில் தமிழருக்கு வேலை கொடுக்கவில்லை. வடமாநிலத்தவர்களுக்கு வேலை  வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார்கள். ஆனால், ஆளுநர் உரையில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூல்ம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 திருச்சியில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ளன. ஆனால், படிப்பிற்கேற்ப வேலைவாய்ப்பு இல்லை. தனியார் நிறுவனங்களிலும் இல்லை. எனவே, மிகப்பெரிய தொழிற்சாலையை திருச்சியில் நிறுவ முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். தமிழகத்தில் சென்னையை அடுத்து மையப்பகுதியாக திருச்சி அமைந்துள்ளது. எனவே, திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும். திருச்சியில் காந்தி மார்க்கெட்டை மாற்றக்கூடாது. அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும். இதற்காக பெண்கள் சிறையை மாற்ற செய்ய வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்’’ என்றார்.