சென்னை: தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை கடந்த மார்ச் முதல் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தினசரி பாதிப்பு சுமார் 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேநேரம், தினசரி சுமார் 20 ஆயிரம் பேர் நோயிலிருந்து குணமடைந்து வருகிறார்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து தேவை என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

தவிர, மருத்துவமனைகளில் உள்ள காலி இடங்களை தெரிந்து கொள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஆக்சிஜன் சப்ளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்து வசதிகளை கண்காணிக்க தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில்; தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன், ரெம்டிசிவிர் தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு ரெம்டிசிவிர் மருந்துகள் அதிக அளவில் வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டுக்கு கொரோனா தடுப்பூசிகளை கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.