சென்னை : தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியா மற்றும் உகாண்டாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மருத்துவமனைகள், கிளினிக்குகள், சுகாதார மையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலியான தடுப்பூசிகள் பொது சுகாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதுடன் நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை; நேரடியாக மத்திய அரசு தொகுப்பில் இருந்துதான் தடுப்பூசிகள் பெறுகிறோம். மகாராஷ்டிரா, கொல்கத்தா போன்ற பகுதிகளில் தான் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் வருகை அதிகரித்துள்ளன, மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டதால் நோயின் வீரியம் குறைவாக உள்ளது. பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.