சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:தென் பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே யார்கோள் என்ற வனப் பகுதியில் கர்நாடக அரசு புதிய அணையை கட்டி முடித்து இருப்பது தமிழக விவசாயிகள் இடையே மிகப் பெரிய அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மதகே இல்லாமல் 162 அடி உயரத்திற்கு அணை கட்டப்பட்டு இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. மேலும், தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டம் கனவாகவே ஆகிவிடும்போல் உள்ளது.

காவிரியை போல் தமிழகத்தின் மற்றொரு நீர் ஆதாரமாக விளங்கும் தென் பெண்ணையாற்றில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவது ஏற்புடையதல்ல. மத்திய அரசு இதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க கூடாது.  மேலும் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்ப தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை முறையாக கொடுக்க வேண்டும்.  கர்நாடக அரசு தமிழகத்தை பல்வேறு வழிகளில் வஞ்சிக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்துரவுப்படி நியாயமாக தமிழகத்திற்கு காவிரியில் அளிக்க வேண்டிய தண்ணீரை பெருமளவு குறைக்கிறது.

அதோடு மேகதாது பகுதியில் தடுப்பணை கட்ட முயற்சிதும், மார்கண்டேய நதியின் குறுக்கு தடுப்பணை கட்டியும், தொடர்ந்து தமிழகத்தின் நீர் ஆதாரத்ததை அழித்து வருவது மிகவும் கண்டிக்கதக்கது. ஆகவே மத்திய அரசு உடனடியாக கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.