சென்னை: தமிழகத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது. தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 18 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று 3 கட்டங்களாக தடுப்பூசிகள் போடும் பணி நடந்தது. தடுப்பூசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் 2 தவணைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டது. 

2-வது தவணை தடுப்பூசி போடும் பணிகளில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2-வது தவணை தடுப்பூசி போடும் பணி மெல்ல நடந்து வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசு மே 1-ந்தேதி முதல் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட பிரிவினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும்பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. கடந்த 28-ந் தேதி இதற்கான முன்பதிவு தொடங்கியது. இதனையடுத்து 1 கோடியே 33 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர்.