சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் குடிசை மாற்று வாரியம் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஜூலை மாத தொகுப்பில் மத்திய அரசு எழுபத்து ஒரு லட்சம் தடுப்பூசிகளை கொடுப்பதற்கு முன் வந்து இருப்பதாகவும் அதில் 10 லட்சம் தடுப்பூசிகள் தற்போது கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

இதுவரை செலுத்தியதிலேயே அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் 2.68 லட்சம் தடுப்பூசிகள் இருப்பதாகவும் இன்றைக்கு உள்ளவை மக்களுக்கு செலுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். நாளை மக்களுக்கு செலுத்துவதற்கு இன்று மாலைக்குள் அடுத்த தொகுப்பு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.