1,000 ஆண்டுகளைக் கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள். அனைத்தையும் தாங்கி, காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் நிற்கும் தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜனின் 1032-ம் ஆண்டு சதயவிழா இன்று (29.10.2017) தொடங்கி நாளை வரை நடக்கிறது.

null

தஞ்சைப் பெரிய கோயில், ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்துவைத்திருக்கிறது. புவி அச்சின் சாய்வுகளைக் கணித்து, மிக நுட்பமாக அடித்தளத்தை அமைத்து, இருகாற்படை நுட்பத்தில் தொடங்கி, கனமில்லாத ஒற்றைக்கல்லால் கோபுரத்தை வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள் சோழச் சிற்பிகள். புவியின் சுழற்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கட்டுமான நுட்பம் உலக வல்லுநர்களை எல்லாம் விழியுயர்த்தி வியக்கவைக்கிறது.

ஒவ்வொரு கல்லிலும் கலைநயம். ஒவ்வொரு சிற்பத்திலும் ஓராயிரம் கதைகள். வழிபாட்டுக்குரிய ஆலயமாக மட்டும் அல்லாமல், வங்கியாக, கலைக்கூடமாக, சமூக நிர்வாகத்துக்கான ஒருங்குகூடு மையமாக விளங்கியிருக்கிறது இந்தப் பெரிய கோயில். இதை இராஜராஜேச்வரம் என்று குறிப்பிடுகின்றன இங்குள்ள கல்வெட்டுகள்.

கல்லணை நீர் தழுவிச்செல்லும் திருச்சுற்று மாளிகை, நெடிதுயர்ந்த திருவாயில்கள், வான் கயிலாயமாகவே விளங்கும் விமானம், இயற்கையின் அத்தனை அம்சங்களையும் அணுக்கமாகச் சுமந்துகொண்டிருக்கும் சிற்பங்கள். என பிரபஞ்சத் தத்துவத்தின் கட்டுமான மொழிபெயர்ப்பாக இருக்கிறது இந்தக் கோயில்.

PERIYA_KOVIL

காஞ்சிபுரத்தில் ராஜசிம்மப் பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில்தான் பெரிய கோயில் எழுவதற்கான ஆதாரம். அக்கோயிலின் அழகிலும் கலையிலும் மயங்கிப்போன ராஜராஜன், தன் தலைநகரில் அப்படியான ஒரு கலைக்கோயிலை எழுப்ப வேண்டும் என்று விரும்பினான். அதன் விளைவுதான் இப்பெரிய கோயில்.

தஞ்சை பெரிய கோயில் உருவாக்கத்துக்குப் பல நூறு பேர் துணை நின்றிருக்கிறார்கள். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொருவரின் உழைப்பு இருக்கிறது. பொருள் படைத்தோர் பொருள் தந்தார்கள். இல்லாதோர் கல் தந்தார்கள். எல்லோரின் பெயரும் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது.

சில வருடங்களுக்குத் திருப்பணி செய்தபோது திருச்சுற்று மாளிகையின் அஸ்திவாரத்தில் ஏராளமான முண்டுக்கற்கள் கிடைத்தன. ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொருவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பொன்னள்ளி கொடுத்தோர் முதல் கல் கொடுத்தோர் வரை எவரின் பெயரும் வரலாற்றில் விட்டுப்போய்விடக் கூடாது என்பதில் ராஜராஜன் காட்டிய அக்கறை வியக்கவைக்கிறது.