சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 14-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது. எம்எல்ஏ-க்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

கொரோனா காரணமாக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் தவிர்த்து வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 21-ம் தேதி கூடவுள்ள நிலையில்,எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா போன்றோர் இந்தக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் கூட்டத்தில் தவறாது கலந்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.