சென்னை: முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி: சாகித்ய அகாடமி விருது பெற்ற கி.ரா. காலமானார் என்ற செய்தி அறிந்து மனவேதனை அடைந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திரவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுவதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

கி.வீரமணி:திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருக்கும் செய்தியில், கரிசல் குயில் என்று போற்றப்படும் முதுபெரும் எழுத்தாளர் கி.ரா. இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துவதாக வேதனை தெரிவித்துள்ளார். ஒரு நூற்றாண்டில் எழுத்து சாட்சியமாக திகழ்ந்தவர் கி.ரா. என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

வைகோ:நூற்றாண்டு பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட தமிழ் இலக்கிய உலகம் ஆர்வத்துடன் காத்திருந்த வேளையில் கரிசல் குயில் பறந்துவிட்டது என்று கி.ரா. மறைவுக்கு மதிமுக செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், செந்தமிழைச் செழுந்தமிழாய் செழிக்க செய்யும் கரிசல் காட்டு மண்ணில் இடைச்செவிலில் மலர்ந்த உப்புவமை சொல்ல முடியாத புதுமையாளர், புரட்சியாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.

தொல். திருமாவளவன்:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்திருக்கும் இரங்கல் செய்தியில், நூறு ஆண்டுகள் வாழ்ந்து நிறைவான பெருவாழ்வு கண்ட கரிசல் இலக்கிய செம்மல் கி.ரா. அவர்களுக்கு எமது செம்மாந்த வீர வணக்கம் என்றார்.

ராமதாஸ்:பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. நாட்டார் வழக்கில் அழிந்து வரும் சொற்களை பயன்படுத்த அறிவுறுத்தியவர் கி.ரா. என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

டிடிவி தினகரன்:அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், தமிழின் தனித்துவமான கதை சொல்லியாக, அழியாத படைப்புகளை தந்தவராக, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்தவர் கி.ரா. என்றும் அவரது மறைவு தமிழுக்கு பேரிழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.கமல்ஹாசன்:மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் விடுத்திருக்கும் இரங்கலில், கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளை தொட்ட மகத்தான படைப்பாளி கி.ராஜநாராயணன் நம்மை நீங்கினார் என்று ட்விட்டர் பதிவு மூலமாக தெரிவித்துள்ளார்.