சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை கடந்த மார்ச் மாதம் முதல் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தினசரி நோய் பாதிப்பு சுமார் 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேநேரம், தினசரி சுமார் 20 ஆயிரம் பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து வருகிறார்கள். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட நகர் பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் வேகமாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து தேவை என்று மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, மருத்துவமனைகளில் உள்ள காலி இடங்களை தெரிந்து கொள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஆக்சிஜன் சப்ளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்து வசதிகளை கண்காணிக்க தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 10ம் தேதியில் இருந்து வருகிற 24ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையான காய்கறி கடைகள், பல சரக்கு மற்றும் தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிக்காக அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றே கூறப்படுகிறது. மீன் கடைகளில் கூட்டம் குறைந்தபாடில்லை.

இந்த சூழ்நிலையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை முன்னிட்டு, அதை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க இன்று (13ம் தேதி) மாலை 5 மணிக்கு, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், `அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜ, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாகத்தான் இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பரவல் ஆரம்பித்தபோது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அதிமுக அரசுக்கு, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால் யாரும் கோரிக்கை வைக்காமலேயே இந்தக் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.