சென்னை: கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கான உலகளாவிய ஒப்பந்த புள்ளியை கோரியுள்ள தமிழக அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மத்திய மாநில அரசுகளால் மக்களுக்கு போதிய தடுப்பூசிகளை வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறையை போக்க உலகளாவிய ஒப்பந்த புள்ளி கோரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கான உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு மருத்துவ கழகம் கோரியுள்ளது. 3 மாதங்களில் 5 கோடி தடுப்பூசி வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு நாட்டிற்கு 20 கோடி தடுப்பூசிகள் வழங்கியுள்ள நிறுவனங்கள் மட்டும் இதில் பங்கேற்குமாறு தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்த ஓராண்டில் மட்டும் 5 கோடி தடுப்பூசிகள் வழங்கியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நிறுவனங்கள் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.