டெல்லி: இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 2,281 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மராட்டியம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் இருக்கின்றன. 

மராட்டியத்தில் 2 ஆயிரம் பேருக்கும், ஆந்திராவில் 910 பேருக்கும், மத்தியப்பிரதேசத்தில் 720 பேருக்கும் கருப்பு பூஞ்சை ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, பீகாரில் 56 பேரும், சண்டிகரில் 8 பேரும், சத்தீஸ்கரில் 87 பேரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். டெல்லியில் 197 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கோவாவில் 12 பேர், ஹரியானாவில் 250 பேரும்  கருப்பு பூஞ்சை நோய்க்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜஸ்தானில் 700, தெலுங்கானா 350, கர்நாடகா 500 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 

தமிழகத்தை பொறுத்தவரையில் 48 பேர் இந்நோய்க்கு இலக்காகி இருக்கின்றனர். கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 23,680 மருந்து குப்பிகள் மருந்துகள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்து தட்டுப்பாட்டை நீக்க உடனடி நடவடிக்கை தேவை என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார். 

லிப்போசோமல் ஆம்போடெரிசின் மருந்து தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற கருப்பு பூஞ்சை நோயை சேர்க்கவும் சோனியா கோரிக்கைவிடுத்துள்ளார்.