கேரள: கேரள சட்டசபை சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.பி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 15-வது கேரள சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக சபாநாயகர் ரகீம் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். முதலமைச்சர் பினராயி விஜயன், முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் சதீஷன் ஆகியோரும் அடுத்தடுத்து பதவிபிரமாணம் எடுத்துக் கொண்டனர். மொத்தம் 136 எம்.எல். ஏக்கள் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர் தேர்வு நடைபெற்றது. 

சட்டசபையில் இடது ஜனநாயக முன்னணிக்கு (எல்.டி.எப்) மெஜாரிட்டி பலம் இருந்ததால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினருமான எம்.பி.ராஜேஷ் 15-வது கேரள சட்டசபை சபாநாயக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக நேற்று சட்டசபை செயலாளர் முன்னிலையில் எம்.பி.ராஜேஷ் மனு தாக்கல் செய்தார். அதேபோல் எதிர்க் கட்சிகள் சார்பில் சபாநாயகராக போட்டியிடும் விஷ்ணுநாத் எம்.எல்.ஏ.வும் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.