சிவகங்கை: கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே நடத்த 6 கட்ட அகழாய்வில் கீழடியில் மட்டும் சுடுமண்ணால் ஆன கட்டிடங்கள் கண்டறியப்பட்டன. கீழடி நகரம் தொழில்சார்ந்த நகரமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஏற்கனவே கட்டிடங்கள் கண்டறியப்பட்ட நிலையில் அந்த கட்டிடங்களில் தண்ணீர் உள்ளே வருவதற்கான ஒரு அமைப்பும், தண்ணீர் வெளியேறக்கூடிய ஒரு அமைப்பும் கண்டறியப்பட்டது.

தற்போது 7ஆம் கட்ட அகழாய்வில் 7 குழிகள் தோண்டப்பட்டிருந்தன. இதில் 6வது குழியில் கடந்த 1ஆம் தேதி முதல் சிறிய உறைகிணறு போன்ற வடிவத்துடன் கூடிய அமைப்பை கண்டறிந்தனர். அதன் விளிம்பு பகுதியில் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்தன. இது சிறிய தொட்டி போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இது நெசவுத்தொழிலுக்கான சாயம் கலப்பதற்காக பயன்படுத்தும் தொட்டியாக இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது. சுமார் 44 செ.மீ உயரமும், 77 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. அகழாய்வு தொடர்ந்து வரும் நிலையில் இதன் முழுவிவரமும் பின்னர் தெரிய வரும் என தெரிகிறது. அகழாய்வு பணிகள் வரும் செப்டம்பர் வரை நடைபெற உள்ள நிலையில் இந்த தொட்டியின் முழு அமைப்பை கொண்டு வருவதற்கான முயற்சியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 தலங்களில் அகழாய்வு பணிகள் நடந்திருந்தாலும் கீழடி தொழில் சார்ந்த நகரமாகவும் கொந்தகை பண்டைய காலத்தில் இறந்தவர்களுக்கு ஈமக்கிரியை செய்து புதைக்கும் இடமாகவும் கண்டறிந்துள்ளனர். கீழடியில் நெசவு தொழில் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர். ஏனென்றால் நெசவு தொழிலுக்கு பயன்படும் குண்டு, ஊசி, சுடுமண்ணால் ஆன சின்னங்கள் ஏராளம் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள தொட்டியில் முதல் 2 உறைகள் மட்டுமே வெளிவந்துள்ளன. மேலும் தோண்டும் பட்சத்தில் கூடுதல் உறைகள் வெளிவர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.