டெல்லி: கடந்த ஆண்டு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்ற நிலையில், இது நடக்காமல் போக என்ன காரணம் என்பது குறித்து பிரியங்கா காந்தி முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் பிப். 10இல் தொடங்கி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த 5 மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் மீது தான் அனைவரது கவனமும் குவிந்துள்ளது. ஏன்னெறால் கடந்த பல தேர்தல்களாகவே அங்கு எந்தவொரு கட்சியும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசம்

அதேபோல பிரதமர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரணாசி தொகுதி உள்ள மாநிலம் என்பதாலும் உபி தேர்தலுக்குப் பலரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அங்கு ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது என்றாலும் கூட காங்கிரஸ் அங்கு மீண்டும் வலுவான ஒரு முத்திரையைப் பதிக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. அங்குள்ள பெண் வாக்காளர்களை முன் வைத்து காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அங்குத் தீவிர பிரசாரம் செய்து வருகிறது. ஏற்கனவே மொத்தமுள்ள தொகுதிகளில் சுமார் 40%இல் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர்

இந்நிலையில், நேற்றைய தினம் அவர் என்டிடிவி செய்தி நிறுவனத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் பிரசாந்த் கிஷோர் உட்பட பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர். இருப்பினும், அதன் பின்னர் கடந்த 2016க்கு பின்னர் அவர் பாஜக உடன் இணைந்து பணியாற்றவில்லை. இந்தச் சூழலில் அவர் காங்கிரசில் இணைவதாகக் கடந்த ஆண்டு வெளியான தகவல் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

என்ன காரணம்

இருப்பினும், பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அது நடக்காமலேயே போனது. இது தொடர்பாக நெறியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரியங்கா காந்தி, “கடந்த ஆண்டு ஒரு கட்டத்தில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது உண்மை தான். ஆனால் அது நடக்காமல் போக பல்வேறு காரணங்கள் உள்ளன. இது நடக்காமல் போக அவர் தரப்பில் சில தவறுகள் உள்ளது. அதேபோல எங்கள் தரப்பில் சில தவறுகள் உள்ளன.

உடன்பாடு இல்லை

என்ன தவறுகள் என்று நான் விளக்க விரும்பவில்லை. இருப்பினும் சில குறிப்பிட்ட முக்கிய விஷயங்களில் எங்கள் இரு தரப்பினருக்கு இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இது பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துவதில் தடையாக இருந்தது. வெளியாள் ஒருவரைக் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வருவதில் நாங்கள் தயங்கவில்லை. அதற்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை. அப்படி நாங்கள் தயங்கி இருந்தால் பலகட்ட பேச்சுவார்த்தை கூட நடந்திருக்காது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்,

தீவிர ஆலோசனை

பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக ராகுல் காந்தியின் வீட்டில் அவருடன் தனியாக நடத்திய பேச்சுவார்த்தை அரசியல் அரங்கில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியில் அவர் டாப் 4ஆவது இடம் கேட்பதாகவும் கூட தகவல் வெளியானது. இருப்பினும், அது நிறைவேறவில்லை.

பிரசாந்த் கிஷோர் அட்டாக்

அது நாள் வரை காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்காமல் இருந்த பிரசாந்த் கிஷோர், அதன் பின்னரே கடுமையாகத் தாக்கி பேசத் தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 90% இடங்களை இழந்துள்ள ஒரு கட்சியை எந்தவொரு தகுதி வாய்ந்த நபரும் வழிநடத்தலாம் எனத் தெரிவித்திருந்தார். அதேநேரம் வரும் 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்கு இருக்கும் என்பதைக் குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், ஆனால் அதற்கு வலுவான ஒரு தலைமை வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.