டெல்லி: கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக மாநிலங்களுக்கு கூடுதலாக 28,000 குப்பிகள் ஆம்போடெரிசின் பி மருந்துகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 28,000 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் பி மருந்தின் 28,000 குப்பிகள் கூடுதலாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைய தொடங்கிய நிலையில் கருப்பு பூஞ்சை எனும் மியூகார்மைகோஸிஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை 28 மாநிலங்களில் 28,252 பேர் மியூகார்மைகோஸிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 86 சதவீதம் அதாவது 24,370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், 62.3 சதவீதம் பேர், அதாவது 17,601 பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது என இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.