டெல்லி : ‘‘கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு: சர்வதேச ஒத்துழைப்புக்கான விஷயம்’’ குறித்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உயர் நிலை வெளிப்படையான விவாதத்துக்கு  பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் பல தலைவர்கள், ஐ.நா உயர் நிலை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிராந்திய அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெளிப்படையான விவாதம், கடல்சார் குற்றம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல்  ஆகியவற்றை தீவிரமாக தடுக்கும் வழிகள் மற்றும் கடல்சார் களத்தில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.கடல்சார் பாதுகாப்பு மற்றும் குற்றங்களின் பல அம்சங்கள் குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விவாதித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனாலும்,  உயர்மட்ட அளவில் வெளிப்படையான விவாதமாக, கடல்சார் பாதுகாப்பு முழுமையான முறையில் விவாதிக்கப்படுவது, இதுவே முதல்முறை.

கடல்சார் பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களை, எந்த ஒரு தனி நாடும் தீர்க்க முடியாது என்பதால், இதை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், முழுமையான விதத்தில் ஆலோசிப்பது முக்கியம்.   கடல்சார் களத்தில் வழக்கமான மற்றும் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது,  கடல்சார் பாதுகாப்புக்கு, ஒரு விரிவான அணுகுமுறை, சட்டரீதியான கடல்சார் நடவடிக்கைகளை பாதுகாக்கும்  மற்றும் ஆதரவளிக்கும்.

சிந்து சமவெளி நாகரீக காலத்திலிருந்தே, இந்தியாவின் வரலாற்றில் கடல்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. நமது நாகரீக நெறிமுறைகள், கடல்களை அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்தக் கூடியவையாக பார்க்கின்றன. அதனால் பிரதமர் திரு நரேந்திர மோடி அனைத்து பிராந்தியத்துக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி(Security and Growth for all in the Region’)  -சாகர் திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டில் கொண்டு வந்தார்.  இந்த தொலைநோக்கு, கடல்களில் நிலையான பயன்பாட்டுக்கான கூட்டுறவு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது  மற்றும் பாதுகாப்பான, நிலையான கடல்சார் களத்துக்கான கட்டமைப்பை வழங்குகிறது.  

2019ம் ஆண்டில், நடந்த கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில், இந்த முயற்சி,  இந்தோ-பசிபிக் கடல்கள் நடவடிக்கை மூலம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.  கடல்சார் சூழலியல்; கடல் வளங்கள்; திறன் மேம்பாடு மற்றும் வள பகிர்வு; பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை; அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஒத்துழைப்பு; வர்த்தக இணைப்பு மற்றும் கடல் போக்குவரத்து என்ற கடல்சார் பாதுகாப்பின் 7 தூண்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டன.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் வெளிப்படையான விவாதத்துக்கு தலைமை ஏற்கும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.  இந்நிகழ்ச்சி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதை இந்திய நேரப்படி மாலை 5.30 மணியிலிருந்து காண முடியும்.