சென்னை : தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமே இல்லை எனவும், எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையிலேயே திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும், தமிழக முதல்வரின் விருப்பமும் அதுதான் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
அரியலூர் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த 17 வயது பள்ளி சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகத்தினர் அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாகவும் இதனால் பள்ளி நிர்வாகம் அவரை திட்டி அதிக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும் இதனால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.
மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயிரிழந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டாய மதமாற்றம்
என புகார் இந்த நிலையில் மாணவி மதமாற்றம் செய்ய முயன்றதால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் அறிக்கை மூலமாக கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் , அவரது குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கை மூலம் வலியுறுத்தியிருந்தார்.
போலீசார் மறுப்பு
இந்நிலையில் மதமாற்றம் மாணவியின் மரணத்திற்கு காரணம் இல்லை என தஞ்சை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, மாணவி மரண வாக்குமூலம் கொடுக்கும்போது மதமாற்றம் குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் தேவையற்ற வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் மாணவியின் அடையாளத்தை கூறினாலோ, அவர் பேசியதாக வெளியாகியுள்ள வீடியோவை பரப்பினாலோ கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் சேகர்பாபு
இந்த நிலையில் தமிழகத்தில் கட்டாய மத மாற்றத்திற்கு இடமே இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு முடிவடைந்த மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோவில்களை திமுக அரசு திட்டமிட்டு மூடுவதாக கூறுவது அற்ப அரசியல் என்றும், அனைத்து மதமும் சம்மதம் அவரவர் விரும்பும் வழிபாட்டுக்கு எந்த வகையிலும் இடையூறு இருக்கக் கூடாது எனவும் சுதந்திரமாக வழிபாடுகளில் ஈடுபட அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறினார்.
கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை
அரியலூரில் கட்டாய மத மாற்றம் காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழகத்தில் எம்மதமும் சம்மதமே என்ற கொள்கையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது எனவும், மாண்புமிகு தமிழக முதல்வரின் எண்ணமும் அதுதான் எனக்கூறிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமே இல்லை என உறுதிபட தெரிவித்தார்.