சென்னை :எதிர்காலத்தில் அரசியலுக்கு நான் வரப்போகிறேனா? இல்லையா? என்ற கேள்விகள் இருக்கிறது; அது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார்.இந்த சந்திப்பு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதனால் காலை முதலே ரசிகர்கள் கோடம்பாக்கத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். மன்ற நிர்வாகிகளை மட்டுமே சந்திப்பார் என்றாலும் மண்டபத்திற்குள் செல்லும் முன்னர் அங்கு குவிந்திருக்கும் ரசிகர்களை பார்த்து கையசைப்பார் என தெரிகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்த பிறகு நான் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவில்லை. அதன்பிறகு அண்ணாத்த ஷூட்டிங் இருந்தது. தேர்தல் முடிவு, கொரோனா வந்தது. இதனால் நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை. அமெரிக்காவில் உடல்பரிசோதனையை முடித்து கொண்டு சென்னை திரும்பியுள்ளேன்.

மக்கள் மன்றத்தை தொடர்ந்து செயல்படுத்துவதா? இல்லையா? என்பது குறித்து ஆலோசிக்க உள்ளேன். மக்கள் மன்றத்தின் எதிர்காலப் பணிகள் என்ன என்று கேள்விகள் உள்ளன. எதிர்காலத்தில் அரசியலுக்கு நான் வரப்போகிறேனா? இல்லையா? என்ற கேள்விகளும் இருக்கிறது; அது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசிக்க உள்ளேன்.அனைத்து கேள்விகளுக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்,’ நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். ரஜினியின் இந்த பேட்டி மீண்டும் அவர் அரசியலுக்கு வருவாரா என்று ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.