சென்னை : உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துவதாக நடிகர் வடிவேலு பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் தனது படத்தின் காமெடி காட்சியை சுட்டிக் காட்டி அனைவரும் தடுப்பூசி போடும்படியும் வலியுறுத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ. 5 லட்சம் கொரோனா நிதிக்கான காசோலையை நடிகர் வடிவேலு வழங்கினார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஆட்சிக்கு வந்த 2 மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் கொரோனாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார். இது மக்களுக்கு பொற்காலம்.கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சியை கண்டு பெருமை அடைந்திருப்பார்,’என்றார்.

மேலும் அனைவரும் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று   தனது படத்தின் காமெடி காட்சியை சுட்டிக் காட்டி வலியுறுத்தினார். தொடர்ந்து கொங்குநாடு சர்ச்சை குறித்து விமர்சித்த அவர், ‘நல்லா இருக்கிற தமிழ்நாட்டை எதுக்கு பிரிச்சுக்கிட்டு. நாடு, நாடு என தனித்தனியாக பிரித்தால் என்னாவது ?. நான் அரசியல் பேசல. இதெல்லாம் பேசும்போது தல சுத்துது,’மீண்டும் இனி அதிக படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் என நடிகர் வடிவேலு குறிப்பிட்டார்.