புதுடெல்லி: நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா டெல்லியில் கூறினார். கர்நாடகா பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில் விஜயபுரா பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால், சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகேஸ்வர் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர் ஏ.எச். விஸ்வநாத் ஆகியோர் முதல்வர் எடியூரப்பாவை வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். எடியூரப்பாவுக்கு 78 வயதாவதால் அவரது தலைமையை மாற்றி வேறு முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா, தனது மகன் விஜயேந்திராவுடன் சிறப்பு விமானத்தில் நேற்று டெல்லி வந்தடைந்தார். அவர் பிரதமர் மோடியை நேற்றிரவு சந்தித்தார். அப்போது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மோடியிடம் எடுத்துரைத்தார். மேலும், கர்நாடக நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகள், உட்கட்சி விவகாரம் குறித்தும் சுமார் இரண்டரை மணி நேரம் மோடியிடம் பேசினார்.

தொடர்ந்து இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை எடியூரப்பா சந்திக்கிறார்.  முன்னதாக டெல்லியில் நிருபர்களிடம் எடியூரப்பா கூறுகையில், ‘நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சியின் தலைமையும் கோரவில்லை. பிரதமர் மோடியை நேற்று சந்தித்த போது, மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக விவாதித்தேன். ஆகஸ்ட் முதல் வாரத்தில் மீண்டும் டெல்லி வரவுள்ளேன். நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும்  தாத்தா பாட்டிகளைப் போல இருக்க வேண்டும். மேகதாது திட்டத்திற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இன்று மத்திய மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திப்பேன்’ என்றார்.