சென்னை: சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்எல்ஏ கூட இல்லை என்றும், எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்படுவதாகவும், தமிழக பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர்… அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதும் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர்.
அது மட்டுமல்ல.. உடனடியாக அவருக்கு கட்சியில் மாநிலத் துணை தலைவர் பதவியும் வழங்கப்பட்டது அப்போதே அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
பாஜக எம்எல்ஏ
தற்போது இவர் நெல்லை பாஜகவின் வெற்றிபெற்ற ஒரு எம்எல்ஏவாக உள்ளார்.. இந்நிலையில், இன்று இவர் பேசிய பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.. சென்னை வள்ளுர் கோட்டத்தில், பாஜக சார்பாக உண்ணாவிரத போராட்டம் இன்று காலை முதல் மாலை வரை நடந்தது.. இந்த உண்ணாவிரத போராட்டத்தில், அக்கட்சியின் மாநில துணை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் பேசும்போது சொன்னதாவது:
நயினார் நாகேந்திரன் “
இப்போது வரை அதிமுக எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படவில்லை.. அப்படி செயல்படுவதையம் பார்க்க முடியவில்லை.. அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை.. எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.. எதிர்கட்சியாக இல்லையென்றாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டிக்கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே..
பாஜக
எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது இருந்த எழுச்சியை போன்றே இப்போது பாஜக உள்ளது.. இந்த சட்டமன்ற தேர்தலில் 2 தவறுகளை அதிமுக செய்துவிட்டது.. இல்லாவிட்டால், இந்நேரம் பாஜக துணையோடு ஆட்சியை அமைத்திருக்கும்.. வருங்காலத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும்” என்று கூறியுள்ளார். திமுகவுக்கு மாற்று இனி நாங்கள்தான் என்று அண்ணாமலை இத்தனை நாளும் சொல்லி கொண்டிருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது..
அதிர்ச்சி
அதுமட்டுமல்ல, நயினார் அதிமுகவில் ஆரம்பத்தில் இருந்து பொறுப்பில் இருப்பவர்.. திராவிட முகத்தை இன்று வரை அவர் இழக்காமல் உள்ளதே இதற்கு சாட்சி.. ஒரு மூத்த தலைவர், திடீரென அதிமுகவை நேரடியாக குற்றம் சொன்னதுடன், ஆண்மையோடு பேச யாருமில்லை என்ற தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நயினாரா இப்படியெல்லாம் பேசுவது என்று அதிமுக கூடாரம் உறைந்து போய் கிடக்கிறது..!