சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
திமுகவை பொறுத்தவரை ஆட்சிக்கு வரும் முன் ஒரு நிலைப்பாடும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடும் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
ஒப்புதல் வாக்குமூலம்
தமிழகத்தில் ராக்கெட் வேகத்தில் கொரோனா பரவுவதாக அமைச்சர் சுப்ரமணியன் தனது பேட்டியின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் திமுக அரசு பதவியேற்றது முதல் கொரோனா அதிகரிப்பதாக அதிமுக அறிக்கைகள் மூலம் சுட்டிகாட்டிய போதெல்லாம் மழுப்பலான அறிக்கைகளை திமுக அரசு வெளியிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கருப்புக் கொடி
கடந்த 2020 மே மாதம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் நாளொன்றுக்கு சுமார் 775 பேர் பாதிக்கப்பட்ட போது டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ஸ்டாலின் வீட்டுக்கு முன் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் ஆனால் தற்போது நாளொன்று கொரோனா பாதிப்பு 24,000 பேர் என உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வினவியுள்ளார்.
டாஸ்மாக் பார்கள்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளிலும் அதன் பார்களிலும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் கூடி நிற்பதை கண் கூடாக பார்க்க முடிவதாக கூறியுள்ள இ.பி.எஸ்., மக்கள் உயிரைக் காக்க வேண்டிய அரசு தனது கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருக்கிறது என விமர்சித்துள்ளார். மேலும், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்திருக்கி
இரட்டை நிலைப்பாடு
திமுகவை பொறுத்தவரை ஆட்சிக்கு வரும் முன் ஒரு நிலைப்பாடும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடும் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். மக்களின் உயிருடன் விளையாடாமல் இரட்டை நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.