சென்னை: ஆசிரியராக இருந்து கடின உழைப்பால் இன்று சபாநாயகர் பதவிக்கு உயர்ந்தவர் அப்பாவு என்று அனைத்து கட்சி உறுப்பினர்கள் பாராட்டி பேசினர். தமிழக சட்டப் பேரவையில், சபாநாயகர் அப்பாவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களை வாழ்த்தி அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பேசினர். பிரின்ஸ்(காங்கிரஸ்): சட்டமன்ற தொகுதி மக்களின் குரலை சட்டமன்ற உறுப்பினர் வாயிலாக இந்த அவையில் ஒலிக்க செய்து, முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் இருந்து தக்க பதிலை பெற்று தருவது என்பது மிக முக்கியம். இந்த பொறுப்பை தாங்கள் அற்புதமாக செய்வீர்கள் என்று ஆளுங்கட்சி, எதிர்கட்சியும், நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
ஜி.கே.மணி(பாமக): அரசியலுக்கு வருவதற்கு முன்பு நீங்கள் ஒரு ஆசிரியர். எனவே ஆசிரியராக பணியை தொடர்ந்து, அரசியலில் காமராஜர் மீது பற்று கொண்டு அங்கும் தடம் பதித்து உங்கள் கடின உழைப்பால் இன்று சபாநாயகராக பொறுப்பேற்றிருப்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. நயினார் நாகேந்திரன்(பாஜக): ஒரு கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்க்காமல் எண்ணங்களின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும், நியாயத்தின் அடிப்படையில் உங்கள் தீர்ப்புகள் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்): ஜனநாயக மரபுகளை பாதுகாக்கக் கூடிய பெரும் பொறுப்பை முதல்வரும், இந்த பேரவையும் தங்களுக்கு அளித்துள்ளது.
சதன் திருமலைக்குமார்(மதிமுக): நெல்லை சீமையில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் 5வது சபாநாயகராக தாங்கள் தேர்வாகியிருப்பது எங்கள் பகுதிக்கு கிடைத்த பெருமை.
ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): இந்த சட்டமன்றத்தில் நடைபெறுகின்ற ஆக்கப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் நடுநிலையோடு தீர்ப்பளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
நாகை மாலி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): வரலாற்று சிறப்புமிக்க இந்த பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தங்களுக்கும், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிச்சாண்டிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜவாஹிருல்லா(மனிதநேய மக்கள் கட்சி): ஆசிரியர் பணியில் இருந்து பொது வாழ்வில் தொடங்கி ஒரு போராளியாக இன்று அரசியல் ஞானியாக நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள். தங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈஸ்வரன்(கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி): சபாநாயகர் அதிக சகிப்பு தன்மை கொண்டவர். வென்று விட்டோம் என்று தெரிந்தும் கூட 5 ஆண்டுகள் அமைதியாக இருந்திருக்கிறார் என்றால் எவ்வளவு சகிப்பு தன்மை கொண்டவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

வேல்முருகன்(தமிழக வாழ்வுரிமை கட்சி): பிரதான எதிர்கட்சி உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு முதல்வருக்கு வணக்கம் செலுத்துவதும், திமுக உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவருக்கும், மற்ற தலைவர்களுக்கும் வணக்கம் செலுத்துவதும் இந்த கூட்டத் தொடரில் நான் காண்கிற புதிய மாண்பாக கருதுகிறேன். இன்று தீர்ப்பளிக்கிற இடத்துக்கு உயர்ந்திருக்கிறீர்கள்.

ஜெகன்மூர்த்தி(புரட்சி பாரதம்): அனைத்து கட்சி உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற்று, அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கு போதிய வாய்ப்பு கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.