கோவை: கோவை வடவள்ளியில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக விசாரணையில் கூறப்படுகிறது. வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் வரவு செலவு புத்தகம் உள்பட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி எடுத்துச் சென்றது.எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், பங்குதாரர்கள் என மொத்தம் 17 பே்ா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களில் 2014 முதல் 2018 வரை நடந்த பல்வேறு திட்டப்பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. செந்தில் அண்ட் கோ பங்குதாரர் அன்பரசன், கே.சி.பி. என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.சி.பி. என்ஜினியர்ஸ் மேலான் இயக்குனர் சந்திரபிரகாஷ் இயக்குனர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.பில்டர்ஸ் ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. சி.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் ராஜன் மற்றும் சில நிறுவனங்களின் பெயர்கள் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சி திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தத்தில் ரூ.346 கோடி ஊழல் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464 கோடி ஊழல் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறது. சென்னையில் எம்.எல்.ஏ விடுதியில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மாநகராட்சி ஒப்பந்தங்கள் குறித்து எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை கேள்வி கேட்டு வருகிறது.