சென்னை; அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கை கைவிடப்போவதில்லை என்று சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும், டிடி.வி தினகரன் துணைப் பொதுசெயலாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைதொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறை சென்றார். அதன் பிறகு கடந்த 2017, செப்டம்பரில் அதிமுக பெயரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் மனுதாக்கல் செய்தனர்.

அதில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் செல்லாது என அறிவிக்க வேண்டும். தங்களை கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதனிடையே அண்மையில் டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கை கைவிடப்போவதில்லை என்று மற்றோரு மனுதாரரான சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வழக்கை தொடர்ந்து நடத்தப்போவதாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. டிடிவி தினகரன் மனுவை வாபஸ் பெற்றாலும் சசிகலா தொடர்ந்து வழக்கை நடத்துவார் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு வரும் 20-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.