சென்னை: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிடுகிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதால், அது அரசியல் சூட்டை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளாக நிதி மேலாண்மை மிகவும் மோசமாக இருந்ததாக திமுக சார்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டது. இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் அரசுக்கு நிதி நெருக்கடி நீடிப்பதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதேபோல், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் பல்வேறு ஆய்வுக்கூட்டங்களை நடத்தினார். இந்தநிலையில், தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு செய்தியாளர்கள் முன்னிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். 120 பக்கங்கள் கொண்ட இந்த வெள்ளை அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள், எந்தெந்த வழிகளில் அவை செலவிடப்பட்டன, கடன் விவரங்கள், சென்னை மெட்ரோ வாட்டர், மின்சார வாரியம், போக்குவரத்து, உள்ளாட்சி ஆகியவற்றில் வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என தெரிகிறது.

இந்த வெள்ளை அறிக்கை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட நிதிப் பின்னடைவுகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படும். நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கடுமையான விவாதங்களைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைய உள்ள நிலையில், நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இன்று வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். இதற்கு முன்பாக, கடந்த 2001ம் ஆண்டு  அதிமுக ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த சி.பொன்னையன், நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை  வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தின் நிதிநிலை குறிந்து வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலத்தின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது.
* 120 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையில் கடந்த அதிமுக அரசின் கடன், வருவாய் இழப்பு உள்பட பல தகவல்கள் இருக்கும்.
* வெள்ளை அறிக்கை தமிழகத்தின் 10 ஆண்டு நிதி பின்னடைவை வெளிப்படையாக தெரிவிக்கும்.