சென்னை: அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் கடந்த 2017-18, 2018-19 ஆகிய நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் 34,374 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது இந்திய தணிக்கை துறை (சிஏஜி) அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.  தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் வரவு-செலவு விவரங்கள் ஒவ்வோர் ஆண்டும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை சார்பில் தணிக்கை செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு தணிக்கை செய்யப்பட்ட விவரங்கள் அறிக்கை கவர்னரின் ஒப்புதல் பெற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதில், இந்திய தணிக்கை துறை சார்பில் அரசு துறைகளின் வரவு-செலவு விவரங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுகிறது. மேலும், துறைகளுக்கு ஏற்பட்டு வரும் வருவாய் இழப்பு, நஷ்டத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக விளக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2017-18ம் நிதியாண்டில் தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் பல்வேறு வருவாய் இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக மத்திய தணிக்கை குழு கண்டுபிடித்தது.

இதனால், கடந்த அதிமுக அரசு 2017-18ம் ஆண்டிற்கு பிறகு தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வந்தது. குறிப்பாக, கடந்தாண்டு மார்ச் 20ம் தேதி இந்திய தணிக்கை துறையால் 2017-18ம் ஆண்டிற்கான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து, நிதித்துறை சார்பில் கடந்தாண்டு செப்டம்பர் 8ம் தேதி சட்டப்பேரவை மேஜையில் வைப்பதற்காக முதல்வர் அலுவலகத்துக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், எந்த காரணமும் கூறாமல் அந்த அறிக்கையை நிதித்துறைக்கு முதல்வர் அலுவலகம் திருப்பி அனுப்பியது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதல்வர் அலுவலகத்துக்கு நிதித்துறை அறிக்கை அனுப்பியது. அப்போதும், எந்த காரணமும் கூறாமல் அந்த அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டன. இதனால், கடைசியாக நடந்த பிப்ரவரி கூட்டத்தொடரில் கூட தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 2017-18ம் ஆண்டிற்கான அறிக்கை வெளியிடாத நிலையில், 2018-19ம் ஆண்டிற்கான அறிக்கையும் தயாரானது. இந்த இரண்டு அறிக்கையும் தாக்கல் செய்யாமல் கடந்த அதிமுக அரசு இழுத்தடித்து வந்தது.

இந்த அறிக்கையை வழக்கமாக தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கும். கவர்னர் இதை ஆய்வு செய்வார். சில நேரங்களில் தவறுகள் இருந்தால் தமிழக அரசை அழைத்து கண்டிப்பார்.  இதனால் கடந்த 2017-18ம் ஆண்டு முதல் அனுப்பப்பட்ட அறிக்கையை அதிமுக அரசு நிறுத்தி வைத்து விட்டது. மேலும், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவில்லை.  இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மீண்டும் தணிக்கை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டன. இந்த அறிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ைகயெழுத்திட்டதால் ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு இந்திய தணிக்கைத்துறை அறிக்கைக்கு ஆளுநர் அலுவலகம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கை நேற்று சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் பார்வைக்கும் வைக்கப்பட்டது. இந்த அறிக்கையின் மூலம் அதிமுக அரசின் நிர்வாக சீர்க்கேட்டால் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் ரூ.34,374 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது இந்திய தணிக்கை துறை அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.  இது தொடர்பாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தணிக்கை துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 75 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. இதில், 68 செயல்படும் அரசு நிறுவனங்கள், 1 சட்டமுறை கழகம், 6 செயல்படாத அரசு நிறுவனங்கள் அடக்கம். இந்த பொதுத்துறை நிறுவனங்களில் 2018 செப்டம்பர் 30ல் இறுதி செய்யப்பட்ட கணக்குகளின் படி பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை வருவாய் 1 லட்சத்து 7 ஆயிரத்து 81 கோடி ஆகும்.

இது 2017-18ம் ஆண்டிற்கான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.50 விழுக்காடாக இருந்தது. கடைசியாக இறுதி செய்யப்பட்ட கணக்குகளின்படி பொதுத்துறை நிறுவனங்களில் 17 ஆயிரத்து 430 கோடி இழப்பு ஏற்பட்டது. 75 பொதுத்துறை நிறுவனங்களில் மாநில அரசின்
முதலீடு (பங்கு மூலம் மற்றும் நீண்ட கால கடன்) ரூ.1,87,739 கோடி ஆகும். அவற்றில் மின் துறையில் உள்ள முதலீடு மட்டும் 1,73,963 கோடி ஆகும். இவை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தமிழக அரசின் மொத்த முதலீட்டில் 92.66 விழுக்காடு ஆகும். மார்ச் 2018ன் படி 2.79 லட்சம் பணியாளர்கள் பணியில் அமர்த்தி இருந்தனர். செயல்படாத 6 பொதுறை நிறுவனங்கள் 14 முதல் 28 ஆண்டுகள் வரை செயல்படாமல் இருந்த இவற்றின் மூலதனம் 69.91 கோடியில் முதலீடு ரூ.41.65 கோடியும், நீண்ட கால கடன்கள் ரூ.21.96 கோடியாகவும் உள்ளனர்.

இவைக் செயல்படாத நிறுவனங்களாக இருந்தாலும் அவற்றின் சொத்துக்களை ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் பாதுகாக்க வேண்டும். 2018-19 ஆண்டிற்கான கணக்குகளின் படி, பொதுத்துறை நிறுவனங்களின் மாநில அரசு முதலீடு (பங்கு மூலதனம் மற்றும் நீண்ட கால கடன்கள்) ரூ.1,97,153 கோடி ஆகும். அவற்றில் மின் துறையில் உள்ள முதலீடு மட்டும் ரூ.1,75,436 கோடி ஆகும். இவை அனைத்தும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தமிழ்நாடு அரசின் மொத்த முதலீட்டில் 88.98 விழுக்காடு ஆகும். செயல்படும் 69 அரசு பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை வருவாய் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 350 கோடி ஆகும். 2018-19ம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.7 விழுக்காடாக இருந்தது. கடைசியாக இறுதி செய்யப்பட்ட கணக்குகளின் படி செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.16,944 கோடி இழப்பு ஏற்பட்டது.

மாநில பொதுத்துறை நிறுவனங்களில் 2019ல் உள்ளபடி 2.74 லட்சம் பணியாளர்கள் பணியில் அமர்த்தி இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் பொத்துறை நிறுவனங்களில் மின் துறை நிறுவனங்களில் பங்கு மற்றும் நீண்ட கால கடன்கள் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 436 கோடியாக இருந்தது.
செயல்படாத ஐந்து பொதுத்துறை நிறுவனங்களில், ஒரு நிறுவனம் அதாவது எஸ்எஸ்எல் தனது கணக்குகளை 2018-19ம் ஆண்டு முடிய இறுதி செய்திருந்தது. தமிழ்நாடு பொருள் போக்குவரத்து கழகம் 1990-91 முதல் கணக்குகளை சமர்பிக்கவில்லை. மீதமுள்ள மூன்று நிறுவனங்கள் ஒன்று முதல் 6 ஆண்டுகள் வரையில் நிலுவையில் வைத்துள்ளது. இந்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளை புறக்கணித்து சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சுண்ணாம்புக்கல், சுரங்க நடவடிக்கைகளை இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்டதால் தவிர்த்திருக்கக் கூடிய அபராதத் தொகை ரூ.57.72 கோடி கட்ட நேரிட்டது. மேலும், ரூபாய் 2.77 கோடி அபராதத்தை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சுங்க வரி செலுத்தியதற்கான தகுந்த ஆதாரம் பெறாமலேயே விற்பனையாளர்களுக்கு சுங்க வரி செலுத்தியதாலும், மேலும் காலதாமதமாக பொருட்களை வழங்கியதற்கான தண்டத் தொகையை வசூல் செய்யாததாலும் விற்பனையாளர்களுக்கு அளித்த ரூ.37.43 கோடி உரியதற்ற சலுகைகையாக அமைந்தது. டைட்டல் பார்க்கின் இணை உரிமையாளர்களிடம் இருந்து முக்கிய ஆலை இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் மாற்றிய வகையில் அவர்களுடைய விகிதாச்சார பங்கினைப் பெறாததால் ரூ.5.63 கோடி உறியதற்ற ஆதாயமாக அமைந்தது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பட்டுவாடா செய்வதற்கான நடைமுறைகளை சரிவர பின்பற்றாததன் விளைவாக ரூ.1.07 கோடி கடன் பெற்றவரால் கையாடல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் பொது விநியோகத் திட்டதின் கீழ் விற்கப்பட்ட, சர்க்கரைக்கான உள்ளிட்டு வரி வரவை கோர தவறியமையால் ஏற்பட்ட தவிர்த்திருக்கக் கூடிய மதிப்பு கூட்டு வரி ரூ.13.67 கோடியாகும்.

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் மூலம் முன் பணம் செலுத்துவதற்கூறிய வரிமான வரியை சரியாக மதிப்பீடு செய்யாமல் குறைவாக செலுத்தியதால் தவிர்த்திருக்கக் கூடிய வட்டிச் செலவு ரூ.1.90 கோடி ஏற்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் நத்தம் பேரூராட்சி மேல்நிலை தொட்டி கட்டுவதற்கான ஒப்பந்ததாரர் மோசடியாக கோரிய தொகையில் உண்மை இல்லாததால் ரூ.4.12 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிகப்பட்ச மின்சார தேவையை சீராய்வு செய்ய 6 மருத்துவமனைகளும், அண்ணா நூற்றாண்டு நூலகமும் தவறியதால் 2016-2019ல் ரூ.7.70 கோடி மின் கட்டணம் கூடுதலாக செலுத்தப்பட்டது. இதை தவிர்த்திருக்கலாம். சிசிடிவி அடிப்படையிலான போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பை வாங்குவதில் ஏற்பட்ட ஒப்பந்த மேலாண்மையில் தவறுகள் காரணமாக ரூ.2.70 கோடி பயணற்றதானதாக ஆனது.

சிதம்பரம், ஜெயங்கொண்டம், கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள் திடக்கழிவுகளை பதப்படுத்துவதற்காக வாங்கிய எந்திரங்களை பயன்படுத்ததால் ரூ.3.94 கோடி செலவு பயணற்றதாக ஆனது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், பாட நூல் கழகத்தின் தொகை கோரிக்கையை சரிபார்க்க பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்கங்கள் தவறியதாலும், மற்றும் பாட நூல்களில் தவறுகளை களைய டிஎஸ்இ தவறியதாலும் ரூ.23.27 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் உயர் தொழில்நுட்ப அமைப்புகள் மீதான பயணற்ற செலவுகள் மற்றும் அரசு பொறுப்புணர்வை காட்டாததால் பொது நூலகங்கள் இயக்குநர் உரிய கவனமின்ற கையாண்டதால் ரூ.7.98 கோடி செலவு பெரும்பாலும் பயன் இல்லாமல் போய் விட்டது. மோசமான திட்டமிடல், அவசரமான செயலாக்கம், நில ஒதுக்கம் மற்றும் கட்டுமானத்தில் தாமதங்கள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் இயங்காமை மற்றும் பகுதி அளவில் இயங்கியவை என்பதும் ரூ.98 லட்சம் தவிர்த்திருக்கக் கூடிய செலவு, பயன்படுத்தப்படாத சொத்துக்களில் ரூ.2.09 கோடி முடக்கமும் ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இறுதி செய்யப்பட்ட  கணக்குகளின்படி   75 பொதுத்துறை  நிறுவனங்களுக்கு  17, 430 கோடி இழப்பு.
* 2018-19 ல் செயல்பாட்டில் உள்ள 69 அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு 16,944 கோடி இழப்பு.
* அரசின் பொறுப்பற்ற தன்மையால்  மின் துறை நிறுவன கடன் 1 லட்சத்து 75 ஆயிரத்து 436 கோடி.
* தமிழக பாட நூல்களில் தவறுகளை களைய டிஎஸ்இ தவறியதால்  23.27 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது.